இலங்கையின் இளைஞர் யுவதிகளிடையே தொழில் முனைவு உணர்வை தூண்டும் SPARK 2023 மாபெரும் இறுதிப் போட்டி

இலங்கையின் வர்த்தக சம்மேளனம் – சர்வதேச தொழிலாளர் தாபனம் இணைந்து தொழில்முனைவோர் உலகில் இலங்கை இளைஞர், யுவதிகளின் பிரவேசத்தை மேம்படுத்துகிறது

இலங்கையின் அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கான தேசியப் போட்டியான ‘SPARK’, உலக தொழில்முனைவோர் தினத்துடன் இணைந்தவாறு, அதன் மாபெரும் இறுதிப்போட்டியை ஓகஸ்ட் 21ஆம் திகதி விமர்சையாக நடாத்தியிருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்நிகழ்வில், நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள், சிக்கல்களுக்கு தீர்வு வழங்குபவர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்ட, 15-24 வயதுடைய படைப்பாளிகள், மாற்றத்தை ஏற்படுத்தும் தங்கள் யோசனைகளை வெளிப்படுத்தி SPARK 2023 விருது விழாவில் போட்டியிட்டனர்.

SPARK 2023 இன் வெற்றியாளரான மிஹிந்தி மினுபமா பண்டார தனது கருத்துகளை வெளியிடுகையில், “SPARK போட்டியில் வெற்றி பெற்றமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இது என்னைப் போன்ற இளம் தொழில்முனைவோருக்கு, எமது யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், வழிகாட்டல்களைப் பெறவும், திறன்களை மேம்படுத்தவும், அதிகளவில் கற்றுக்கொள்ளவும் ஒரு தளத்தை வழங்குகிறது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இதன் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அத்துடன் இது போன்ற நிகழ்வுகளை எதிர்காலத்திலும் நடத்த வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

இதற்காக, நாடு முழுவதிலும் இருந்து 400 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், முதல் 5 இடங்களைப் பெற்ற போட்டியாளர்கள், தங்களது வியாபார யோசனைகளை நடுவர் குழாம் முன்னிலையில் முன்வைத்தனர். இந்த நடுவர்கள் குழாமில் பிரதமரின் மேலதிக செயலாளர் தீபா லியனகே, ThreadWorks இன் தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி ஜெஹான் டி சொய்சா, Hemas Holdings PLC குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் நிர்வாகப் பணிப்பாளருமான, கஸ்தூரி செல்லராஜா வில்சன், களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலிங்கமுதலி, Remedium One பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமந்தா ரணதுங்க, களனி பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் வன்னிநாயக்க, Dialog Axiata PLC நிலைபேறானதன்மை நடைமுறைப்படுத்தல் நிபுணர் ரக்ஷிகா நெடுமாறன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

பல்வேறு தொழில்முனைவு சூழல் பங்குதாரர்கள், செல்வாக்குச் செலுத்துவோருடன் இணைந்து செயற்படுத்தப்பட்ட SPARK ஆனது, ஏனைய போட்டிகளிலிருந்து தனித்துவமானதாக, பாடசாலை மட்டத்திலிருந்தான இளைஞர்களை இணைப்பதில் கவனம் செலுத்துகிறது. அத்துடன் பங்கேற்பாளர்களின் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு மனநிலையை மேமப்படுத்துவதில் அது அர்ப்பணிப்புடன் உள்ளது. SPARK ஆனது இறுதிப் போட்டி நோக்கிய பயணத்தில், 100 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு மெய்நிகர் பயிற்சி அமர்வுகளை முன்னெடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து முதல் 35 போட்டியாளர்களுக்கான விசேட 2 நாள் boot camp இடம்பெற்றது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான நாடுக்கான ILO அலுவலகத்தின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் Thomas Kring இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “SPARK இலங்கையிலுள்ள இளைஞர் தொழில்முனைவோரைக் கொண்டாடுவதற்கு அப்பால் சென்று இப்போட்டியின் மூலம், பாடசாலைகளில் தொழில்முனைவோர் கழகங்களை நிறுவல், வழிகாட்டுனர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் குழுவை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளால் தொழில்முனைவோர் சூழல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இளைஞர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தனியார் துறையினர் மத்தியில் தொழில்முனைவு அம்சத்தை ஒரு சாத்தியமான தொழில் தெரிவாகவும், தொழில் முனைவு திறமைகளை எமது இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் இலங்கைக்கும் இன்றியமையாததாகக் கருதும் வகையிலான மாற்றத்திற்கு SPARK பங்களிப்பு வழங்கும் என நம்புகிறோம்.” என்றார்.

இது தொடர்பில், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ கருத்துத் தெரிவிக்கையில், “SPARK போட்டியானது, இளைஞர்களின் தொழில்முனைவுத் திறன் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான ஒரு தளத்தை வழங்கியுள்ளதுடன், இந்த நிகழ்விற்கு அப்பால் சென்று, தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் ஒரு சூழலையும் அது உருவாக்கியுள்ளது. SPARK ஐ வருடாந்த நிகழ்வாக நடாத்துவதற்கு வர்த்தக சம்மேளனம் உறுதி பூண்டுள்ளது. எமது தேசத்தின் ஆர்வம் மிக்க இளம் தொழில்முனைவோரை அவர்களது துறையில் பிரகாசிக்கவும், அதில் வளர்ச்சியடைந்து, வெற்றி பெறவுமான ஒரு தளத்தைக் கொண்டிருப்பதை இது உறுதி செய்கிறது.” என்றார்.

தொழில்முனைவு அம்சமானது, தற்போதைய நியமங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, புதிய சிந்தனையை உட்புகுத்துகிறது. அத்துடன் தீர்வுகளை முன்வைத்து, நிலைபேறான மாற்றத்திற்கு வழி வகுக்கிறது. இளைஞர்களின் படைப்பாற்றல், உந்துசக்தி, திறமை ஆகியவற்றின் ஒன்றிணைவானது, சிறந்த எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் வல்லமைமிக்க சக்தியை உருவாக்குகிறது.

SPARK: Youth Entrepreneurship Competition 2023 (இளைஞர் தொழில்முனைவு போட்டி 2023) ஆனது ILO வின் South Asia Leadership in Entrepreneurship (SALE) திட்டத்தின் ஒரு முயற்சியாகும். இலங்கை வர்த்தக சம்மேளனம் இதனை செயற்படுத்தும் ஒரு பங்காளியாக உள்ளது. SPARK போன்ற மூலோபாய தலையீடுகள் மூலம், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் நிதியளிக்கப்படுகின்ற  ILO வின் SALE திட்டம், தொழில் முனைவுக்கான உலகில் இளைஞர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், தொழில் முனைவோர் சூழல் தொகுதிகளில் மாற்றத்தை உருவாக்கவுமான முயற்சிகளில் ஒன்றாகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *