ரொஷான் மஹானாமவுக்கு உதவிக்கரம் நீட்டும் Nippon நன்கொடை அறக்கட்டளை

Nippon நன்கொடை அறக்கட்டளை (Nippon Donation Foundation) உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பட்டு வரும் ஒரு அமைப்பாகும். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சுகாதாரம், கல்வி, சுயதொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக அது முன்னெடுத்து வருகிறது. அதன் நிறுவுனர் மற்றும் தலைவர் யூமா முரனுஷி (Yuma Muranushi) இனால் இது ஜப்பானில் கூட்டிணைக்கப்பட்ட முன்னணி நன்கொடை அமைப்புகளில் ஒன்றாக திகழ்கின்றது. அவர் தனது இளம் வயதிலிருந்தே, உலகில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு வருகிறார். சுயதொழில் முயற்சி கொண்ட பாராட்டுக்குரிய தொழிலதிபரான யூமா முரனுஷி, ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது தனது 19ஆவது வயதிலிருந்தே முதலீடு செய்ய ஆரம்பித்தார். அவர் தனது 24ஆவது வயதில் ஒரு தனிப்பட்ட நிதி நிறுவனத்தை நிறுவி, நிதி வணிகத்திற்குள் நுழைந்ததோடு, உள்நாட்டு, வெளிநாட்டு நிதிகளை நிர்வகித்தார். தொடர்ந்து பல வணிகங்களையும் அவர் கொள்வனவு செய்தார்.

Nippon நன்கொடை அறக்கட்டளையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி ருவன் பெரேராவின் அழைப்பின் பேரில் யூமா முரனுஷி இலங்கை வந்துள்ளார். அவர் இலங்கையின் தேசிய வைத்தியசாலைக்கு ரூ. 10 மில்லியன் பெறுமதியான மருந்துகளை இதற்கு முன்னர் நன்கொடையாக வழங்கியிருந்தார். இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹானாமவின் தொடர்ச்சியான சமூகப் பணிகளுக்காகவும், நாட்டின் இந்த சவாலான காலத்தில் நன்கொடைகளை வழங்குவதற்காகவும் அவர் உதவியளித்துள்ளார். நீண்ட கால அடிப்படையில் நன்கொடைகள் மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) மூலம் இலங்கையில் தனது வர்த்தக மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நடவடிக்கைகளை பரவலாக விரிவுபடுத்துவதற்கான வழிகளை மேற்கொள்வதற்காகவும் யூமா முரனுஷி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

யூமா முரனுஷி தனது இலங்கை விஜயம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “கலாநிதி ருவன் பெரேராவினால் இலங்கை வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் நான் பெருமையடைகிறேன். இந்த நாட்டை எல்லையற்ற ஆற்றல் கொண்ட ஒரு நாடாக நான் பார்க்கிறேன். தற்போதைய பொருளாதார சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள சவால்களில் இருந்து மீண்டு வருவதற்கு இந்த தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் எம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டியது அவசியமானதாகும். இந்த சவாலான காலகட்டத்தில் தனது பெருந்தன்மை மூலம் விலைமதிப்பற்ற செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் ரொஷான் மஹானாமவுக்கு உதவ முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

கலாநிதி ருவன் பெரேரா ஒரு மின்சார பொறியியலாளர் ஆவார். அவர் ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுள்ளார். Sony நிறுவனத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிரேஷ்ட மட்டத்தில் பணியாற்றியுள்ளார். கலாநிதி ருவன் பெரேரா தனது பெயரில் உலகளாவிய ரீதியிலான 3 காப்புரிமைகளைப் பெற்றுள்ளதோடு, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் வர்த்தகமற்ற இருதரப்பு உறவுகளுக்கு பாலமாக உள்ளார். அவர் தற்போது இலங்கையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீட்டை கொண்டிருக்கும் ஒரு குழுமத்தின் தலைவராக உள்ளார். இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட விமானநிலைய குறுகிய கால தங்குமிட ஹோட்டலை (Transit Hotel) நிர்மாணிப்பதற்காக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தமை அவரது  சமீபத்திய முதலீடாக காணப்படுகின்றது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட துறைகளுக்கு தனது நன்கொடைகள் மற்றும் அது சார்ந்த திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக, Nippon நன்கொடை அறக்கட்டளை உறுதியளித்துள்ளது. சிறந்த இலாபமீட்டும் திட்டங்களில் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஜப்பானிய முதலீட்டாளர்களை இந்த அமைப்பு தொடர்ந்தும் ஊக்குவிக்கும். அத்துடன். ஜப்பானிய சந்தைக்குள் பிரவேசிக்க விரும்பும் உள்ளூர் ஏற்றுமதியாளர்களுக்கு வசதிகளை வழங்க, கலாநிதி ருவன் பெரேரா உதவியளிப்பார். அது மாத்திரமன்றி, தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உதவுவதற்காக, எதிர்வரும் சில மாதங்களில் ஜப்பானிய முதலீட்டுக் குழுவொன்று இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *