2022 உலக சுற்றாடல் தினத்தில் Coca-Cola – Eco Spindles இணைந்து பிளாஸ்திக் மறுசுழற்சி வசதியான புதிய Eko Plasco Material Recovery Facility அறிமுகம்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, Coca-Cola Beverages Sri Lanka Ltd (CCBSL) மற்றும் Eco Spindles Pvt Ltd ஆகியன இணைந்து, புதிய Eko Plasco மூலப்பொருட்களை மீட்டெடுக்கும் ஆலை Material Recovery Facility (MRF) இனை ஜூன் 08 ஆம் திகதி வாதுவையில் ஆரம்பித்து வைத்துள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தலைமையில் இந்த அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. கழிவு முகாமைத்துவத்திற்கு ஆதரவளித்தல், மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அர்த்தமுள்ள மறுவாழ்வை வழங்குதல், பொறுப்பான வகையில் சூழலிலிருந்து பிளாஸ்டிக்கை அகற்றுவது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த MRF திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

MRF என்பது ஒரு திண்மக்கழிவு முகாமைத்துவ வசதியாகும். இது PET பிளாஸ்டிக் போன்ற மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்துவதோடு, அவற்றை மீண்டும் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கான மூலப்பொருட்களாக உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்கிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகள், ஒரு பாரிய தொட்டி மற்றும் பைகள் மூலமான சேகரிப்பு வலையமைப்பு மூலம் சேகரிக்கப்பட்டு, பின்னர் MRF இற்கு அனுப்பப்படுகின்றன. அங்கு Bailer மற்றும் Crusher இயந்திரங்கள் மூலம் பிரிக்கப்பட்டு பல்வேறு செயன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. இங்கு Bailer உபகரணம் பிளாஸ்டிக்கை நன்றாக அழுத்துவதன் மூலம் வேண்டிய வடிவில் அமைத்து, கொண்டு செல்வதை எளிதாக்குகிறது. அதே நேரத்தில் Crusher இயந்திரம் பிளாஸ்டிக்கை துகள்களாக வெட்டி மறுசுழற்சி செய்பவர்களுக்கு விற்பதற்கு முன்பு இந்த கழிவுப் பொருட்களுக்கு பெறுமதி சேர்க்கின்றது.

MRF ஆனது, ஒரு வட்டப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சாதகமான தாக்கத்தை உருவாக்குகிறது. இது கழிவுகள், மாசடைவுகள், பச்சைவீட்டு வாயு வெளியீடுகளை குறைப்பதோடு, உற்பத்திகள் மற்றும் பொருட்களை மீள்சுழற்சி செய்து அதன் ஆயுளை நீடிக்கும் ஒரு பொறிமுறையாகும். இவ்வசதிகள் மூலம், குறித்த செயற்பாடுகள் இடம்பெறும் இடங்களில் உள்ள சமூகங்களுக்கு கழிவு சேகரிப்பு போன்ற துணைத் தொழில்களை உருவாக்கி, வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கவும் உதவுகின்றன. Eko Plasco MRF ஆனது, பாடசாலைகள், கடற்கரைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட, பிளாஸ்டிக் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் பைகள் நிறுவப்பட்டுள்ள முக்கிய இடங்களில் வீட்டுக் கழிவுகளை பிரித்தெடுப்பது மற்றும் பொறுப்பாக கழிவுகளை அகற்றுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட உதவும் திட்டமாகவும் செயற்படும்.

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “Coca-Cola Beverages Sri Lanka மற்றும் Eco Spindles போன்ற தனியார் துறை நிறுவனங்கள் இலங்கையின் கழிவு முகாமைத்துவ உட்கட்டமைப்புக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். Eko Plasco MRF போன்ற இவ்வாறான முயற்சிகள் இலங்கை அரசாங்கம் கொண்டு வரவுள்ள விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு (EPR முன்முயற்சிக்கு அமைவானதாக இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.” என்றார்.

Coca-Cola Beverages Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Mayank Aroroa (மயங்க் அரோரா) இது தொடர்பில் தெரிவிக்கையில், ‘Give Back Life’ (மறு வாழ்வளித்தல்) எனும் எமது திட்டத்தின் ஒரு பகுதியாக Eko Plasco வசதி ஆரமிக்கப்பட்டுள்ளது. இது, ‘World Without Waste’ (கழிவு அற்ற உலகம்) எனும் நிறுவனத்தின் உலகளாவிய அர்ப்பணிப்புக்கு இணங்க, 2030 ஆம் ஆண்டுக்குள் Coca-Cola விற்பனை செய்யும் ஒவ்வொரு போத்தலுக்குச் சமமான போத்தல்களை சேகரித்து மறுசுழற்சி செய்வதே இதன் இலக்காகும். Eco Spindles உடன் இணைந்து MRF செயற்பாட்டில் முதலீடு செய்வதானது, எமது கழிவு சேகரிப்பு முயற்சிகளை பாரிய வகையில் மேம்படுத்தும் என்பதுடன், விரைவில் அறிமுகமாகவுள்ள தேசிய தன்னார்வ EPR முயற்சியையும் அது பின்பற்றுவதாக அமையும். Eco Spindles மற்றும் எமது செயற்படுத்தும் பங்குதாரரான Janathakshan உடன் இணைந்து Coca-Cola அறக்கட்டளையின் நிதியுதவியுடன் எதிர்காலத்தில் மேலும் 6 MRF களை நாம் நிறுவவுள்ளோம் என்பதை இவ்வேளையில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சேகரிப்பு மையங்கள் மூலம் சுமார் 10,000 கிலோ கிராம் பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டு, அவை செயலாக்கத்திற்குப் பின்னர், இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனமான Eco Spindles இற்கு அனுப்பப்படும். அந்நிறுவனத்தின் செயற்கை நூல் உற்பத்தி தொழிற்சாலையானது உலகிலுள்ள இரண்டு தொழிற்சாலைகளில் ஒன்றாகும். பிளாஸ்திக் துகள்களிலிருந்து நேரடியாக நூலை உருவாக்கும் திறனை அது கொண்டுள்ளது. Eco Spindles ஆனது, இம்மூலப்பொருட்களை நூல் மற்றும் ஒற்றை இழைகளாக மாற்றுகிறது. அவை தும்புத்தடிகள், தூரிகைகள், ஆடையக தேவைகள் போன்ற வீட்டுப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. அத்துடன் இத்தயாரிப்புகள் 15 நாடுகளுக்கும் மேல் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்தில் அணிந்த சீருடையை உருவாக்க இந்த நூலே பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Eco Spindles Recycling இன் பிரதான நிறைவேற்று அதிகாரி மனோஜ் உடவத்த கருத்து வெளியிடுகையில், “Coca-Cola நிறுவனத்துடனான கூட்டுச்சேர்வானது, எமது முதலாவது MRF தொகுதியை அமைப்பதற்கும் கழிவு சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி செயன்முறையை வலுப்படுத்துவதற்கும் எமக்கு உதவியுள்ளது. வாதுவையில் உள்ள Eko Plasco வசதி இதற்கு ஒரு சான்றாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு MRF இனையாவது திறப்பதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். முழுத் திறனுடனான இந்த வசதிகள் மூலம், சுமார் 300 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ஒரு MRF இற்கு சுமார் 30,000 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகளை நிலத்திலிருந்து மீள்சுழற்சிக்காக அனுப்பவும் முடியும். MRF கள் சமூக, சுற்றாடல் மற்றும் நிதி நிலைபேறான தன்மையை உள்ளடக்கிய விரிவான வசதிகளாகும்.” என்றார்.

இந்த வசதி குறித்து, Eko Plasco நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மலிந்து லியனகே, கருத்து வெளியிட்டபோது, “நான் எப்போதுமே உலகத்திற்கு திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன். இந்த முயற்சி எனது வாழ்க்கையில் எனது பணியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சமூகத்திற்கு திருப்பிக் கொடுப்பதற்கான வழியையும் ஏற்படுத்தியுள்ளது. MRF யினை நிறுவுவதன் மூலம், தற்போது சுற்றுச்சூழலில் இருந்து பல்வேறு வகையான மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை சேகரிக்க முடிகிறது. குறிப்பாக PET மற்றும் ஏனைய பிளாஸ்டிக்குகள் மற்றும் உலோகம், கண்ணாடி, அட்டைகள், பொலித்தீன், பியர் கேன்கள் போன்றன, மேலதிக நிதி பெறுதலுக்கு வழி வகுக்கிறது. இந்த தொழிற்சாலையை நிறுவுவதில், CCBSL மற்றும் Eco Spindles ஆகிய நிறுவனங்களிடமிருந்து நான் பெற்ற ஆதரவு விலைமதிப்பற்றதாகும். குறிப்பாக எமக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் சேகரிப்புத் தொட்டிகள் / பைகள் ஆகியவற்றை அவை வழங்கியுள்ளதோடு, அவை தொடர்ந்தும் எமது முன்னேற்றத்திற்கு உதவ உறுதியளித்துள்ளன.” என்றார்.

MRF கள் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதால், நாட்டின் கழிவு முகாமைத்துவத் துறையில் ஒரு பாரிய மாற்றத்தை அவை ஏற்படுத்தியுள்ளன. Eco Spindles இன் உற்பத்திகளின் ஏற்றுமதிகள் தற்போதைய நிலையில் மிகவும் தேவையான வெளிநாட்டுச் செலாவணியை பெற்றுத் தருவதால், இது நாட்டிற்கு பாரிய பயனனை அளிக்கிறது. சூழலிலும் சமூகங்களிலும் சாதகமான தாக்கத்தை உருவாக்குவதற்காக, Coca-Cola, Eco Spindles மற்றும் அவர்களது கூட்டாளர்கள் இணைந்து Eko Plasco போன்ற வசதிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *