‘சிறந்த பெருநிறுவன பிரஜை விருதுகள் 2022’ இல் விருதுகளை வென்ற Coca-Cola ஶ்ரீ லங்கா

– பொருட்கள் மீள்சுழற்சி வசதிகள் மற்றும் நீர் முகாமைத்துவ திட்டங்களுக்கான கௌரவம்

Coca-Cola ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் இலங்கையில் புரட்சிகர கழிவு முகாமைத்துவ திட்டங்களான’, ‘பொருட்கள் மீள்சுழற்சி வசதிகள்’ (Material Recovery Facilities – MRFs) மற்றும் ”விவசாயத்திற்கான நீரை அணுகுதல் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான வாழ்வாதாரம்’ (WALK) ஆகிய திட்டங்களுக்காக ‘சிறந்த நிலைபேறானதன்மை திட்டங்கள்’ பிரிவின் கீழ், மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘சிறந்த பெருநிறுவன பிரஜை விருதுகள் 2022’ (Best Corporate Citizen Awards 2022) இல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதிப்புமிக்க விருது நிகழ்வு, பெருநிறுவன இலக்குகளை பின்பற்றியவாறு சூழல், சமூகம், பொருளாதார நிலைபேறானதன்மை தொடர்பில் நிறுவனங்கள் கொண்டுள்ள சிறந்த நடைமுறைகளுக்கு அங்கீகாரமளிக்கின்றது.

MRF (பொருட்கள் மீள்சுழற்சி வசதிகள்) ஆனது, முதன்முறையாக அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஒரு தனித்துவமான முன்முயற்சியாகும். இது நாட்டில் முதன்முறையாக விரிவான MRF வசதிகளை நிறுவிய Coca-Cola Beverages Sri Lanka (CCBSL) இற்கான உயர்ந்த மதிப்புமிக்க விருதாகும். இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான கழிவு முகாமைத்துவ பிரச்சினைக்கு ஒரு சிறந்த தீர்வை வழங்குகின்ற, சமூகத்தை மையமாகக் கொண்ட, பிரதிபலிப்புடனான, நிலைபேறான மாதிரித் திட்டமே இதுவாகும்.

இந்த கௌரவம் குறித்து, CCBSL நிறுவன பொதுமக்கள விவகாரங்கள், தொடர்பாடல்கள் மற்றும் நிலைபேறானதன்மை (PACS) பணிப்பாளர் தமாரி சேனாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இவ்விருது எமது MRF திட்டத்தின் மதிப்பிற்கு ஒரு அங்கீகாரமாகும். கழிவு சேகரித்தலானது, இலங்கையில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக உற்பத்தி செய்யப்படும் கழிவுகளின் அளவிற்கும், சேகரிக்கப்பட்டு அகற்றப்படும் பொறுப்பிற்கான அளவிற்கும் இடையே பரந்த இடைவெளி உள்ளது. CCBSL ஆனது MRF வசதிகளுக்கு, கழிவு சேகரிப்பு மற்றும் செயலாக்க உட்கட்டமைப்பு அம்சத்தை வழங்கியதோடு, கழிவுகளை பொறுப்பாக அகற்றல், அவற்றின் பெறுமதி, மீள்சுழற்சி ஆகியன தொடர்பில் சமூகங்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது. MRF வசதிகள், திறனான மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவு சேகரிப்பு பொறிமுறையை நிறுவி, சேகரிப்பாளர்களுக்கு அவர்களின் சேகரிப்புக்கான வழக்கமான கொடுப்பனவிலும் பார்க்க இரட்டிப்பாக செலுத்துவதன் காரணமாக, இலங்கையில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவு சேகரிப்பின் அளவு மற்றும் மீள்சுழற்சியின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. எமது மீள்சுழற்சி பங்குதாரரான Eco Spindles Pvt Ltd நிறுவனம், இத்திட்டத்தை செயற்படுத்துவதில் எமக்கு பாரிய ஆதரவை வழங்குவதோடு, MRF வசதிகளால் சேகரிக்கப்படும் PET கழிவுகளில் இருந்து தும்புத்தடிகள் மற்றும் தூரிகைகளுக்கான நார்கள் மற்றும் உடைகளை உருவாக்குவதற்கான நூல் உள்ளிட்ட பெறுமதி சேர் பொருட்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்கின்றது.” என்றார்.

மீள்சுழற்சி செய்யும் பொருட்டான, பல்வேறு வகையான பாவனைக்கு பின்னரான நுகர்வோர் கழிவுகள், MRF வசதிகளால் சேகரிக்கப்பட்டு, கொள்வனவு செய்யப்பட்டு, மீள்சுழற்சிக்காக  செயலாக்கத்திற்குட்படுத்தப்படுகின்றன. இரத்தினபுரி (Go Recycling Hub) மற்றும் வாதுவை (Eko Plasco) ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட இரண்டு MRF வசதிகளும், அந்தந்த பகுதிகளில் காணப்படும் மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை சேகரிக்க உதவும் 2 இளம் உள்ளூர் தொழில்முனைவோரால் அர்ப்பணிப்புடன் மிகவும் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. 350 இற்கும் அதிக கழிவு சேகரிப்பாளர்களின் வலையமைப்பின் மூலம் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கப்படுவதோடு, இது பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொருளாதார பாதிப்பை சந்திக்கக்கூடிய சமூகங்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஜனவரி 2021 முதல் செப்டெம்பர் 2022 வரை முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு அமர்வுகள் மூலம், மீள்சுழற்சி செய்யக்கூடிய 257,000 கிலோகிராமிற்கும் அதிக கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதோடு, 24,000 இற்கும் அதிகமானோர் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

W.A.L.K திட்டத்தின் மூலமான ‘நீர் முகாமைத்துவம்’ முன்முயற்சிகளுக்காக Coca-Cola விற்கு இரண்டாவது முறையாக ‘சிறந்த நிலைபேறான திட்டம்’ (Best Sustainability Project) விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது, Coca-Cola அறக்கட்டளையினால் நிதியளிக்கப்பட்டு, உள்ளூர் விவசாயிகள் அமைப்புகளுடன் இணைந்து, NGO ACTED இனால் செயற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், மொணராகலை, கலஹிட்டிய கிராமத்தில் உள்ள சமுர்த்தி நீர்த் தாங்கி புனரமைக்கப்பட்டது. இதன் மூலம் வருடாந்தம் 285,054 கிலோ லீற்றர் நீரை மீள் நிரப்பும் கொள்ளளவுக்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

PACS இலங்கை, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகியவற்றுக்கான பிராந்திய தலைவர் லக்‌ஷான் மதுரசிங்க இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாக கொண்டுள்ள கிராமப்புற சமூகங்களில் சமமான மற்றும் நிலைபேறான வாய்ப்புகளை உறுதி செய்வதில் நீருக்கான அணுகல் முக்கிய பங்கு வகிக்கிறது. 15.4% மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இலங்கையின் வசதி குறைந்த பிரதேசமான ஊவா மாகாணத்தின் மொணராகலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் அவசரத் தேவைகளுக்கு இத்திட்டம் துணைபுரிகிறது. Coca-Cola ஶ்ரீ லங்கா தனது பானங்களின் உற்பத்திக்காக பயன்படுத்தும் நீரை விட இரண்டு மடங்கு நீரை சமூகங்களுக்கும் இயற்கைக்கும் WALK மீளக் கொடுத்துள்ளது. இதன் மூலம் தனது உலகளாவிய இலக்கான நீர் நடுநிலைமையை அடைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்

வரட்சியானதோ, ஈரலிப்பானதோ எந்தவொரு பருவத்திலும் மேலதிகமாக 100 ஏக்கர் நெல் வயலை பயிரிட முடியும் என்பதையும், சோளம் மற்றும் மரக்கறி வகை பயிர்களுக்கு 150 ஏக்கர் வரையும் பயிரிட முடியும் என்பதை WALK உறுதி செய்துள்ளது. குறைந்த மழை வீழ்ச்சி பதிவாகும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்யும் வகையில் விவசாயிகளுக்கு நீர் பம்பிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் அச்சமூகம் வரட்சி, மாறும் வானிலை நிலைமைகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் அதனை முகம் கொடுக்கக்கூடியதாக உள்ளது. அந்த வகையில், பெண் விவசாயிகள் உள்ளிட்ட 1,769 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை WALK மேம்படுத்தியுள்ளது.

Coca-Cola ஶ்ரீ லங்கா, சரியான முறையில் அதன் வர்த்தகத்தை மேற்கொள்வதன் மூலம் மக்களின் வாழ்விலும், சமூகங்களிலும், இப்பூமியிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் மிகவும் நிலைபேறான மற்றும் சிறந்த பகிரப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அதன் நோக்கத்தில் உறுதியாக உள்ளது.

#END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *