சட்டவிரோத குடிபெயர்தலை தடுக்க எல்லை தாண்டிய ஒத்துழைப்பு அவசியம்

அவுஸ்திரேலியாவின் கூட்டு முகவர் பணிக்குழு நடவடிக்கை இறையாண்மை எல்லைகள் தளபதி, ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ், CSC, RAN இன், கடந்த வார கொழும்பு விஜயம் மூலம், சட்டவிரோத ஆட்கள் கடத்தலை நிறுத்துவதற்கான அவுஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

வாழைச்சேனையிலிருந்து சென்ற 41 இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் இடம்பெயர முற்பட்ட நிலையில், கடந்த மே மாத ஆரம்பத்தில் Operation Sovereign Borders இனால் இடைமறிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ரியர் அட்மிரல் ஜோன்ஸ், “சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதிலான வெற்றியானது, இரு அரசாங்கங்களின் தொடர்ச்சியான வெற்றியாகும். ஆனால் இது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.” என்றார்.

“சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களுக்கிடையேயான கூட்டாண்மை உயர்ந்த தரத்தில் உள்ளது. அத்துடன் சமீபத்தில் இடம்பெற்ற இந்த இடைமறிப்பானது, இதன் நீடித்த நெருக்கத்திற்கு ஒரு சான்றாகும்” என ரியர் அட்மிரல் ஜோன்ஸ் மேலும் தெரிவித்தார்.

“இந்த இடைமறிப்பு, இந்த சட்டவிரோத பயணங்களின் ஆபத்துகள் மற்றும் பின்விளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவூட்டுவதோடு, இது தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நிரூபிக்கிறது”

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மக்கள் இன்னும் ஏமாற்றமான வழிகளில் செலவிட்டு, சட்டவிரோத கடல்வழிப் பயணங்கள் பலனளிக்கும் என ஏமாறுகிறார்கள். அது அவ்வாறு  அமையாது. அதனால்தான் இந்த பயணங்களைத் தடுக்கும் வகையில் அது தொடர்பான இடர்கள் மற்றும் சட்ட ரீதியான பாதைகள் குறித்து சமூகங்களுக்குக் தெளிவூட்டுவது இன்றியமையாததாக உள்ளது.” என்றார்.

சட்டவிரோத கடல் வழிப் பயணங்களைத் தடுப்பதிலும் அதனை முறியடிப்பதிலும் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான பங்காளித்துவத்தின் செயற்றிறன் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ இங்கு பாராட்டிப் பேசினார்.

“ஆட்கடத்தல் மற்றும் ஏனைய நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் அவுஸ்திரேலியாவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது. மக்கள் ஆட்கடத்தல்காரர்களினால் பாதிக்கப்பட்டு இரையாவதைத் தடுப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்,” என நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இந்த உறவின் வெற்றியானது நாடு முழுவதும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆட்கடத்தலுக்கு எதிரான ‘Zero Chance’ தொடர்பாடல் பிரச்சாரத்தின் வெற்றியை பிரதிபலிக்கிறது. இத்திட்டமானது, பல்வேறு விளம்பரங்கள் மற்றும் சமூக தொடர்பாடல் வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அவுஸ்திரேலியாவின் வலுவான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள், உத்தரவாதமற்ற கடல் பயணங்களை மேற்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள், சட்டவிரோதமாக குடியேறுபவர்களை எச்சரிப்பதற்காகவும், ஆட்கடத்தல்காரர்கள் தங்கள் நலனுக்காக மேற்கொள்ளும் குற்றவியல் புறக்கணிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கொண்டுள்ளது.

Zero Chance தொடர்பான வீதியோர சமூக விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், அவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து இலங்கையர்களிடையே அதிக அளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமை அறியக் கூடியதாக இருந்தது. ஆயினும் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லும் முயற்சிகளின் சட்டரீதியான பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பல்வேறு மட்டங்களில் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

“கணக்கெடுக்கப்பட்டவர்களில் 97% ஆனோர் சட்டவிரோத கடல் பயணங்கள் குறித்த அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் பற்றிய வலுவான விழிப்புணர்வைக் கொண்டிருந்தனர். இந்த மட்டத்திலான விழிப்புணர்வானது, இலங்கையிலுள்ள பல்வேறு சமூக-பொருளாதார குழுக்களிடையே Zero Chance செய்தியை பரப்புவதில் எமது இலங்கை பங்காளிகளின் அர்ப்பணிப்பைப் பறைசாற்றுகிறது.” ரியர் அட்மிரல் ஜோன்ஸ் தெரிவித்தார்.

“இதை இவ்வாறு சொல்வதன் மூலம், இப்பிராந்தியத்தில் எமது ஒருங்கிணைந்த பணி ஒருபோதும் நிற்காது. இது போன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதன் பயனற்ற தன்மையை இங்கு இதற்கு அப்பால் என்னால் விளக்கமுடியாது. சட்டவிரோத கடல் ரீதியான குடிபெயர்வை மேற்கொள்வது தொடர்பில் எதிர்பார்ப்பு கொண்டவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு பூச்சியமாகவே உள்ளது” என ஜோன்ஸ் இங்கு வலியுறுத்தினார்.

அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: www.australia.gov.au/zerochance இணையத் தளத்தை பார்வையிடவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *