CMTA காலை உணவு ஒன்றுகூடலின் விருந்தினர் பேச்சாளராக ஜப்பானிய தூதுவர்

தெற்காசியாவின் மிக சிரேஷ்ட வாகன சங்கமான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) கொழும்பு ஹில்டன் ரெசிடென்சிஸ் ஹோட்டலில், தமது பங்குதாரர்களுடனான மற்றுமொரு காலை உணவு ஒன்றுகூடல் மன்றத்தை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki விருந்தினர் பேச்சாளராகக் கலந்துகொண்டதுடன் அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் மோட்டார் தொழிற்துறையிலுள்ள ஏனைய பங்குதார நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நுகர்வோர், சூழல் மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மோட்டார் வாகன தொழிற்துறையை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து, இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சாரக பெரேரா இங்கு உரையாற்றியிருந்தார். கடந்த சில வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட பல அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை மேற்கோள் காட்டிய அவர், அவ்வாறான அனைத்து தொழில்துறைகளுக்கும் ஒரு ஒதுக்கீட்டு முறையை கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும், வாகனத் துறைக்கும் இதில் ஒதுக்கீடொன்றை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். இதன் மூலம் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையையும் குறைக்க எனவும். எந்தவொரு பொருளாதாரத்தின் செயற்பாட்டிற்கும் திறனான போக்குவரத்து அவசியம் என்றும், நாட்டில் தற்போதைய வாகனங்களின் எண்ணிக்கையில் 50% ஆனவை 10 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாரக பெரேரா மேலும் தெரிவிக்கையில்: “இந்தத் தொழில்துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையின் அடிப்படையில், அத்தொழில்துறைகளில் சிலவற்றின் 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு நாட்காட்டி வருடங்களுக்கான இறக்குமதிச் செலவினங்களை வெளிப்படுத்த விரும்புகிறேன். தைத்த ஆடைகள் மற்றும் அணிகலன்களை இறக்குமதி செய்ய 421 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் தளபாடங்களுக்கு 739 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. கடல் உணவுக்கு 310 மில்லியன் டொலர்களும், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கழிப்பறைகளுக்கு 122 மில்லியன் டொலர்களுமென என இறக்குமதி செலவு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த 4 வகை இறக்குமதிகளுக்கான மொத்த அந்நியச் செலாவணி வெளியேற்றம் மாத்திரம் கடந்த இரண்டு வருடங்களில் 1,592 மில்லியன் டொலர்களாக ஆகும். எனவே, இந்தத் தொழில்துறைகளில் பெரும்பாலானவற்றுக்கு ஒதுக்கீட்டு முறை இருப்பது அவசியமாகும். அது நாம் உட்பட அனைவரையும் வாழ அனுமதிக்கும் என நாம் நம்புகிறோம். நான் கூறிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில், வாகனத் துறைக்கு குறைந்தபட்சம் 400 மில்லியன் டொலர்களை எளிதாக ஒதுக்கியிருந்திருக்கலாம். இதன் மூலம் இத்தொழில்துறையில் எமது வணிகங்கள் பாதிக்கப்படாமல் நிர்வகிக்கப்படவும், இழந்த 15,000 இற்கும் மேற்பட்ட தொழில்களை பாதுகாக்கவும், அரசாங்கத்திற்குத் தேவையான வருமானத்தை வழங்கவும் போதுமானதாக இருந்திருக்கும்.” என்றார். அவர் தனது உரையின் இறுதியில், இத்தொழில்துறையை ஒழுங்குபடுத்துவதற்கும், நாட்டில் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழில்துறையை நிலைப்படுத்துவதற்கான ஆதரவளிப்பதற்கும் வெளிநாடுகளின் தூதுவர்களின் ஆதரவை கோரினார்.

அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி உரையாற்றினார். தூதுவர் மிசுகோஷி தனது உரையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்குட்பட்ட பொருளாதார மற்றும் நிதி மறுசீரமைப்புகளின் முக்கியமான தேவை பற்றி பேசினார். இது உள்ளூர் பொருளாதாரத்தை நிலைபேறானதாக மீட்டெடுக்க உதவும் எனத் தெரிவித்தார். இலங்கைக்கான ஜப்பானின் பரந்த அளவிலான உதவிகள் மற்றும் இலங்கையில் ஜப்பானிய முதலீட்டை ஊக்குவிப்பதற்கான தனது முன்னோக்குகள் மற்றும் அவ்வாறு செய்வதில் ஜப்பானிய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவர் மேலும் விளக்கினார்.

அவர் மேலும் தெரவிக்கையில், “இலங்கையின் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான ஒரு முக்கிய படியாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தான வெற்றிகரமான அங்கீகாரம் தொடர்பில் நான் இலங்கைக்கு வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். நிரந்தரமான முறையில் பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுப்பதற்கு, இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட நிதி மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகளை அமுல்படுத்த வேண்டும் என்பதோடு, ஜப்பான் அத்தகைய முயற்சிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கும். தற்போது IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி உதவி (EFF) அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் விரைவில் பொருளாதார மீட்சி ஏற்படும் என்றும், அதன் பின் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு இலங்கை அரசு தயாராகும் என்றும் நான் நம்புகிறேன்.” என்றார்.

தூதுவரது உரையின் பின்னர்,  அவர் கேள்வி பதில் அமர்வில் பங்கேற்றார். இது CMTA இன் இதற்கு முன்னர் பதவி வகித்த முன்னாள் தலைவர் யசேந்திர அமரசிங்கவினால் நெறிப்படுத்தப்பட்டது. நெறிப்படுத்தியவர் மற்றும் பார்வையாளர்களின் பல்வேறு தலைப்புகளிலான பல கேள்விகளுக்கு தூதுவர் பதிலளித்தார். காபன் வெளியேற்றத்தை குறைத்தல் (Decarbonization) உள்ளிட்ட நிலைபேறான அபிவிருத்திக்கு ஆதரவளித்தல், பல்வேறு பிராந்தியங்களில் நிலவும் பல்வேறு வாழ்க்கைத் தர இடைவெளிகளை நிரப்புதல், முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதற்கு ஆதரவளித்தல் உள்ளிட்டவை இலங்கைக்கான ஜப்பானின் முன்னுரிமைகளுக்குள் அடங்கும் என்று தூதுவர் குறிப்பிட்டார். மின்சார வாகனங்கள் தொடர்பாக தெரிவித்த அவர், நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், மின்சார வாகனங்களால் பாரிய நன்மைகள் எதுவும் இல்லை என்றும், மின்னுற்பத்தியில் காபன் வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பில் இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். மின்சார முச்சக்கர வண்டிகள் குறுகிய ஓட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதனால், ஜப்பானிய நிறுவனம் ஒன்று, இலங்கையில் அவற்றை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1919 இல் நிறுவப்பட்ட, சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) ஆனது, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அனுமதி பெற்ற ஒரேயொரு வர்த்தக சங்கமாகும். இது வாகன உற்பத்தியாளர்களால் உள்நாட்டில் நியமிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் கொண்டவர்களை (பொதுவாக ‘முகவர்’ என்று அழைக்கப்படுகிறது) பிரதிநிதித்துவப்படுத்துகிறது. CMTA வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான இலங்கையர்களை பணிக்கு அமர்த்தி, பயிற்சிகளை வழங்கும் அதே நேரத்தில், பொறியியல் மற்றும் முகாமைத்துவத்தில் சர்வதேச ரீதியாக கடைப்பிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகளையும் நாட்டிற்கு கொண்டு வந்து, நன்கு பயிற்றப்பட்ட மற்றும் வெளிநாடுகளில் தொழில் பெறும் ஆற்றல் கொண்ட ஒரு தொழிற்படையை உருவாக்குகின்றனர்.

PHOTO CAPTIONS

1. ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி நிகழ்வில் உரையாற்றும்போது…

2. ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி அவர்களுக்கு CMTA தலைவர் சாரக பெரேரா, முன்னாள் தலைவர் யசேந்திர அமரசிங்க மற்றும் சிரேஷ்ட பிரதித் தலைவர் விரான் டி சொய்சா ஆகியோரால் பாராட்டுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட போது…

3. CMTA தலைவர் சாரக பெரேரா நிகழ்வில் உரையாற்றும் போது…

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *