LMD இன் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனங்களின் 2023 தரவரிசையில், மிகவும் மதிக்கப்படும் FMCG (விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்) நிறுவனமாக மகுடம் சூடப்பட்ட யூனிலீவர் ஸ்ரீ லங்கா

தொடர்ச்சியாக 18ஆவது வருடமாக தனது தொழிற்துறை தலைமைத்துவ நிலையை நிலைநிறுத்தி, LMD இன் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனங்களின் 2023 தரவரிசையில், மிகவும் மதிக்கப்படும் FMCG (விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்) நிறுவனமாக யூனிலீவர் ஸ்ரீ லங்கா அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், ‘Consumer Products’ (நுகர்வோர் தயாரிப்புகள்) மற்றும் ‘Multinational’ (பன்னாட்டு) ஆகிய இரண்டு பிரிவுகளிலும் துறையின் வெற்றியாளராக பெயரிடப்பட்டுள்ளது. இத்தரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, LMD இன் சிறந்த 12 செயற்றிறன் அளவீட்டு சுட்டிகளிலும் அதிக புள்ளிகளை யூனிலீவர் ஸ்ரீ லங்கா பெற்றுக் கொண்டுள்ளது. நிதிச் செயற்றிறன், தரத்தில் அதிக கவனம், முகாமைத்துவ உயர் தகுதி, நேர்மை, புத்தாக்கம், இயக்கவியல், கூட்டாண்மை கலாசாரம், பெருநிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் நிலைபேறானதன்மை, தூரநோக்கு, தேசிய ரீதியிலான பார்வை, மனிதவளம் மற்றும் ஊழியர்கள் முகாமைத்துவம், நெருக்கடி முகாமைத்துவம் ஆகியனவே அச்சுட்டிகளாகும். இந்த விடயங்கள் யாவும் நிறுவனத்தின் நெறிமுறைகளில் ஆழமாக பதிந்துள்ளன.

யூனிலீவர் ஸ்ரீலங்காவின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹாஜர் அலபிபி இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “நாம் இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய FMCG நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டதையிட்டு மிகவும் பெருமையடைவதோடு, அதனை கௌரவமாகவும் கருதுகிறோம். இந்த அங்கீகாரமானது, எமக்கும் எமது பங்குதாரர்கள் அனைவருக்கும், உள்ளூர் சமூகங்கள் மத்தியில் நாம் ஏற்படுத்தி வரும் சாதகமான மற்றும் நிலைபேறான தாக்கத்தையும், எமது வர்த்தகநாமங்கள் மற்றும் எமது நிறுவனத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. நிலைபேறான வாழ்க்கையை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றுதல் எனும் எமது தூரநோக்கின் மூலம் வழிநடத்தப்படும் எமது வர்த்தக நாமங்கள், உலகின் ஆரோக்கியம், மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, நியாயமான, சமூக உள்ளடக்கலை கொண்ட உலகை அடைவதற்காக அவை பங்களிக்கின்றன. நாட்டின் சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியிலும் நுகர்வோரின் இதயங்களுக்குள் மிக நெருக்கமாக சென்றடைந்திருப்பது தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்தியதன் மூலம், கடந்த 18 வருடங்களாக LMD இன் மதிப்புமிக்க பட்டியலில் இடம்பெற்றிருப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். கடந்த 85 ஆண்டுகளாக, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, எமது வர்த்தக நாமங்கள் மற்றும் எமது மக்களிடையே தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகிறோம். இலங்கை மக்களிடையே செழிப்பை ஏற்படுத்துவதில் நாம் தொடர்ச்சியாக முதலீடு செய்வோம். பெருநிறுவனங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை வெளிக் கொண்டுவரும் வகையிலான LMD யின் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.” என்றார்.

சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, உண்மையான இலங்கையர்களின் வாழ்க்கை முறையைப் பாதுகாத்து பேணும் செயற்பாட்டை யூனிலீவர் ஶ்ரீ லங்கா மேற்கொண்டு வருகிறது. இது நாட்டிலுள்ள மிகப்பெரிய, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதோடு, அதன் 96% ஆன தயாரிப்புகளை ஹொரணையில் உள்ள அதன் உற்பத்தி நிலையத்திலும், உள்நாட்டிலுள்ள மூன்றாம் தரப்பு உற்பத்தித் தளங்களிலும் மிக இறுக்கமான உற்பத்தித் தரங்களை பேணியவாறு நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. சந்தையில் முன்னணியிலுள்ள 30 வர்த்தகநாமங்களை நிறுவனம் உற்பத்தி செய்வதோடு, இதன் மூலம் தினமும் 21 மில்லியன் இலங்கையர்களின் வாழ்வை மேம்படுத்துகிறது.

அது மாத்திரமன்றி, நிறுவனத்தின் 15 வர்த்தகநாமங்கள் Brand Finance இன், வருடாந்த வர்த்தகநாம தரவரிசையில் மிகவும் விரும்பப்படும் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. முன்னணி வர்த்தகநாமமான Sunlight இதில் ஒட்டுமொத்த துறை இணை வெற்றியாளராக இடம்பிடிப்பதோடு, Horlicks, Lifebuoy, Knorr, Surf, Comfort, Marmite, Pears, Signal, Lux, Vaseline, Glow & Lovely, Sunsilk, Clear, Vim ஆகியனவும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளதன் மூலம், யூனிலீவர் ஶ்ரீ லங்காவின் அதிக எண்ணிக்கையிலான வர்த்தகநாமங்கள் இப்பட்டியலில் இடம்பிடிக்க காரணமாக அமைந்துள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *