UNDP மற்றும் Hatch இன் CONNECT திட்டம்: இலங்கையின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து, அறிவாற்றல் மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் எழுச்சியூட்டும் வெளிப்பாடாக, Hatch ஆனது இலங்கையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட CONNECT Demo Day நிகழ்வில் புத்தாக்கமான வணிக தொடக்கங்களை (startups) காட்சிப்படுத்தியது. ஆர்வம் மற்றும் நெகிழ்ச்சித் தன்மை கொண்ட, சிறந்த 18 வணிக தொடக்கங்கள், நாட்டின் ஒளிமயமான மற்றும் நிலைபேறான எதிர்காலத்தை நோக்கிய பாதையை இங்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.

ஜூலை 20ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிலைபேறான உணவு விற்பனைச் சங்கிலிகள், புதுப்பிக்கத்தக்க சக்தி, சுகாதாரத் தொழில்நுட்பம், கல்வித் தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புத்தாக்க கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இங்கு நம்பிக்கைக்குரிய தொழில்முனைவோர், இந்த தொலைநோக்குப் பார்வைக்கு வலுவான அர்ப்பணிப்புடன்,  முன்னேற்றத்தின் உண்மையான சிற்பிகளாக, இலங்கையை செழிப்பை நோக்கி அழைத்துச் செல்வதற்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர்.

இலங்கையில் தொழில்முனைவோரிடமுள்ள ஈர்ப்புத்தன்மையை தொடர்பில் கருத்து வெளியிட்ட Hatch இன் CONNECT நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் நிரேஷ் ரத்னகோபால், அதன் வெற்றிக்கு அவசியமான நெகிழ்வுத் தன்மை தொடர்பிலும் இங்கு குறிப்பிட்டார். UNDP உடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட, CONNECT திட்டமானது, ஆற்றல் மிக்க எண்ணங்களைக் கொண்ட இளைஞர்களின் புத்தாக்கங்களை வெளிக் கொண்டுவர உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு அவசியமான முக்கிய ஆதரவையும் பெற ஒரு தளத்தை வழங்குகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னோடியான வணிக தொடக்கங்கள் தங்களது உயர்ந்த தீர்வுகளால் பார்வையாளர்களை கவர்ந்ததன் மூலம், இந்நிகழ்வு இலங்கையில் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு ஒரு சான்றாக அமைந்தது.

UNDP இன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota, இங்கு தெரிவிக்கையில், “நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய முக்கியமான கட்டத்தில், அடுத்த தலைமுறையை வலுவூட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, எமது வளங்களைச் சேகரித்து, இளம் தொழில்முனைவோருக்கு எந்தவொரு வகையிலாவது ஆதரவளிப்பது அவசியமாகும். இதைச் செய்வதன் மூலம், நாம் தொழில்முனைவோருக்கு உதவுவது மட்டுமல்லாமல், எதிர்கால வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வழி வகுக்கிறோம்.” என்றார்.

நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் தொழில்முனைவோர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) ஒன்றிணைத்து மேம்படுத்துவதற்கான மிகச் சிறந்த எண்ணமே, இந்த முன்முயற்சியின் மையமாக உள்ளது. CONNECT திட்டமானது, ஆர்வமுள்ள எண்ணம் கொண்டோருக்கு, மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அவர்களது வணிகங்களை முன்வைக்க ஒரு முக்கிய மேடையை வழங்குவதன் மூலம், அது வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பு என்பதை நிரூபித்துள்ளது.

இந்த தொடக்க வணிகங்கள் ஒவ்வொன்றும் இன்று இலங்கை எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சவால்களை எதிர்கொள்ளும் பணியில் உள்ளது.

இதில் ‘Cultivision’ எனும் வணிக தொடக்கமும் காணப்பட்டது. இதன் மாற்றத்தை ஏற்படுத்தும் சேவையானது, அதிநவீன தொழில்நுட்பத்திற்கும் கிராமப்புற விவசாயிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியாகும். மேம்பட்ட விவசாய நடைமுறைகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம், Cultivision ஆனது இலங்கையின் விவசாயத் துறையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி, விளைச்சலை அதிகரிப்பதையும், இத்துறையில் தொழில்நுட்பத்தின் நன்மைகளை அனைவரும் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Demo Day நிகழ்வில் கருத்து வெளியிட்ட Cultivision நிறுவுனர் ஷாஜா மஹ்மூத், “இலங்கையின் பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கிய அங்கமாக இருந்த போதிலும், பெரும்பாலான விவசாயிகள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள், மட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அறிவையே கொண்டுள்ளனர். இந்த விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய முயற்சிகளில் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு தெளிவூட்டும் பொறுப்பை Cultivision ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பது, அவர்களது சமூகங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் இறுதியில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பதே எமது நோக்கமாகும்.” என்றார்.

மற்றுமொரு குறிப்பிடத்தக்க தொடக்க வணிகமானது, ‘MCQ Med’ ஆகும். இது மருத்துவ மாணவர்களின் பரீட்சைக்கு தயாராதல் மற்றும் வெற்றிக்கு ஆதரவாக உள்ளது. பாரம்பரியமான கடதாசி போன்ற கற்கை உபகரணங்களால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்துள்ள MCQ Med, நாட்டில் உள்ள அனைத்து தனிநபர்களுக்கும் மருத்துவக் கல்வியின் அணுகலை பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அத்துடன் சுகாதாரத் துறைக்கு இதன் மூலம் உதவியளிக்கிறது.

இதேவேளை, ‘Designer Dent’ தொடக்க வணிகமானது, பல் மருத்துவம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த செயற்பாடுகளில் குறிப்பிடும்படியான கவனம் செலுத்தி, சுகாதாரத் துறையில் 3D அச்சிடல் தொழில்நுட்பத்தை பயன்பாட்டைக் காட்சிப்படுத்தியது. சுகாதார சேவைகளில் கட்டுப்படியான விலையிலும் துல்லியத்தன்மையை உறுதியளிக்கும் வகையிலும் உள்ள இந்த தொடக்க வணிகமானது, இலங்கையின் சுகாதாரத் துறையில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

‘Ray Engineering’ ஆனது மின்சார வாகன (EV) உரிமையாளர்களுக்கான புரட்சிகரத் தீர்வுகளை காட்சிப்படுத்தியது. மின்சார வாகனங்களுக்கு இலகுவான வகையில் சார்ஜிங் செய்யும் இரண்டு தெரிவுகளையும், தமக்கு அருகில் உள்ள சார்ஜிங் நிலையங்களைக் கண்டறியவும், இது தொடர்பான கணக்குகளை தடையின்றி நிர்வகிக்க பயனர்களுக்கும் சார்ஜிங் நிலையங்களுக்கும் பயனளிக்கும் வகையிலான பயனர் நட்பு ‘Boostnet’ செயலியையும் அறிமுகப்படுத்தினார்கள். Ray Engineering ஆனது, இலங்கை மக்களுக்கு மின்சார வாகன பயன்பாட்டை, நடைமுறை ரீதியான மற்றும் கட்டுப்படியான வகையில் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தொலைநோக்கு கொண்ட நிறுவனங்களுக்கு, CONNECT நிகழ்ச்சித் திட்டம் மற்றும் Demo Day ஆகியன, அவர்கள் வளர்ச்சியடைவதற்கான ஒரு தளத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இலங்கை தொழில்முனைவோரின் ஒப்பற்ற திறன்கள் பற்றி உலகிற்கு எடுத்துக் காட்டியும் உள்ளன. ஆர்வமுள்ள பார்வையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம், இந்த தொடக்க வணிகங்களுக்கு வாழ்க்கையில் பிரகாசிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான கதவுகளையும் திறந்து வைத்துள்ளது.

சவால்கள் நிறைந்த இந்த தேசத்தில், இந்த தொடக்க வணிகங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாக உருவெடுத்து, இலங்கையின் அவசரத் தேவைகளை நேரடியாக நிவர்த்தி செய்வதற்கான புத்தாக்கமான தீர்வுகளை ஒளியாக வீசுகின்றன. அவர்களது ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், முன்னேற்றம் மற்றும் செழிப்பை அவர்கள் அடைவதற்கான வாக்குறுதியானது, இலங்கையிலுள்ள தொழில்முனைவோரின் இடைவிடாத முயற்சிக்கான மனப்பான்மை மூலம் செயற்படுத்தப்படுகிறது.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *