ஏற்றுமதி பொருளாதார உற்பத்தியில் இலங்கையின் கவனத்தை எடுத்துக் காட்டிய COMPLAST 2023

முழுமையான பிளாஸ்டிக் பொருட்கள் கண்காட்சியின் (COMPLAST 2023) 7ஆவது பதிப்பானது, உற்பத்திகள் மூலமான ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்புக்கு முக்கிய இடத்தை வழங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்நிகழ்வு, 2023 ஓகஸ்ட் 25 முதல் 27 வரை, கொழும்பில் உள்ள பெருமைமிக்க பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்று வருகிறது. இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் நிறுவனம் (PRISL), Smart Expos, Industrial Development Board ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பானது, COMPLAST 2023 கண்காட்சியை வெற்றிகரமாக நடாத்துவதற்கு உச்ச பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்த ஒப்பிடமுடியாத கூட்டாண்மையானது, இலங்கையின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் அதன் ஊக்குவிப்பு தொடர்பான இந்த அமைப்புகளின் கூட்டு முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு, அதன் உலகளாவிய உற்பத்தி பாதையை மேம்படுத்துகிறது.

‘புத்தாக்கத்தை மெருகூட்டுதல், முன்னேற்றதிற்கு வலுவூட்டல்’ எனும் தொனிப்பொருளின் கீழ், தொழில்துறை முன்னேற்றம் தொடர்பான நாட்டின் அசைக்க முடியாத கவனத்தை காட்டும் வகையில் இடம்பெற்ற இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வானது, கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண தலைமையில் இடம்பெற்றது. இந்த திறப்பு விழாவில் விசேட விருந்தினர்களாக, இலங்கைக்கான இந்திய துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே உள்ளிட்ட கௌரவ பிரமுகர்கள் மற்றும் அதிதிகள் கலந்து கொண்டதோடு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். சர்வதேச ஒத்துழைப்புகளை வளர்ப்பதிலும் தொழில்துறை வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் இந்நிகழ்வு முக்கியத்துவம் வழங்கியுள்ளதை இது பிரதிபலிக்கிறது.

சிறந்த வெளியீட்டை வழங்கக் கூடிய மூன்று நாட்களில் இடம்பெறும் இந்த நிகழ்வானது, தொழில்துறையின் வேகத்தை ஒப்பிட முடியாத அளவிற்கு உயர்த்தும் அதே வேளையில், இது ஐந்து கண்காட்சிகளை காட்சிப்படுத்துகிறது.

அவையாவன, RUBEXPO 2023: சர்வதேச இறப்பர் எக்ஸ்போவின் 4ஆவது பதிப்பு. இது இறப்பர் கைத்தொழிலில் ஒருங்கிணைந்த பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் தயாரிப்புகளின் பரந்த வரிசையை காட்சிப்படுத்துகிறது. COMEXPO 2023: முழுமையான உற்பத்தி கண்காட்சியின் 4ஆவது பதிப்பு இதுவாகும். அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை வழங்குவதன் மூலம் உற்பத்தித் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. TOFAS 2023: ஆரம்பக் கருவிகள் மற்றும் வேகமாக்கிகள் கண்காட்சி. இது வன்பொருட்கள், கருவிகள், வேகமாக்கிகள், உற்பத்தித் துறைக்கு அத்தியவாசியமான மூலப்பொருட்களை காட்சிப்படுத்துகிறது. MOPEEXPO 2023: உதிரிப் பாகங்கள், டயர்கள், மின்கலங்கள், கராஜ் உபகரணங்களைக் கொண்ட உயர் மோட்டார் வாகன பாகங்களுடன் இம்முறை அறிமுகமாகும் கண்காட்சியாகும். இலங்கை வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் சங்கம், வாகன தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனம், இலங்கை மோட்டார் உதிரிப் பாகங்கள் முகவர்கள் சங்கம் உள்ளிட்ட முக்கிய தொழில்துறை சங்கங்களிலிருந்து விரிவான ஆதரவை MOPEEXPO கண்காட்சி பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது, இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படும் வகையிலான 200 இற்கும் அதிகமான நிறுவனங்களுடன், குறிப்பாக பங்கேற்பாளர்களை கவரக்கூடிய நிறுவனங்களின் பட்டியலைக் கொண்டுள்ளது. இந்த கண்காட்சியில் 50 இற்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள், 80 சீன நிறுவனங்கள், இலங்கை முழுவதிலும் இருந்து 80 இற்கும் மேற்பட்ட உள்ளூர் நிறுவனங்கள் பங்குபற்றுகின்றன. இந்நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் புத்தாக்கமான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை இங்கு காட்சிப்படுத்துகின்றன.

Smart Expos India (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, பி. சுவாமிநாதன், இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டி  கருத்து வெளியிடுகையில், “இந்த முக்கியமான கால கட்டத்தில், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை வளர்ப்பது மிகவும் முக்கியத்துவமானதாகும். COMPLAST 2023 ஆனது, உலகளாவிய பார்வையாளர்களுக்கு இலங்கையின் உற்பத்தித் திறனை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு கருவியாக செயற்படுகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை, ஏற்றுமதிகள் மூலம் நிலைபேறான வளர்ச்சியை நோக்கி வழிநடத்துவதில் இந்த நிகழ்வு சந்தேகத்திற்கு இடமின்றி பங்களிக்கிறது.” என்றார்.

COMPLAST 2023 ஆனது, ஒரு முக்கிய நிகழ்வாக வளர்ந்து வருகிறது. உற்பத்தித் துறையின் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, அவர்களது யோசனைகள், புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் அவர்களது ஆய்வுகளுக்கு ஒரு தனித்துவமான தளத்தை இது வழங்குகிறது.

COMPLAST 2023 ஆனது, தொழில்துறையிலுள்ள தலைவர்கள், புகழ்பெற்ற அதிதிகள், ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களின் வலுவான ஆதரவுடன், உலகளாவிய அரங்கில் இலங்கையின் உற்பத்தித் திறனுக்கு உறுதியான இடத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *